< Back
மாநில செய்திகள்
ஈரான் கடற்படை சிறைபிடித்த தொண்டி மீனவர்கள் 2 பேர் விடுவிப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ஈரான் கடற்படை சிறைபிடித்த தொண்டி மீனவர்கள் 2 பேர் விடுவிப்பு

தினத்தந்தி
|
6 Aug 2023 12:15 AM IST

ஈரான் கடற்படை சிறைபிடித்த தொண்டி மீனவர்கள் 2 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆவணங்கள் இல்லாததால் ஒருவர் சிறையில் தவிக்கிறார்.

தொண்டி,

ஈரான் கடற்படை சிறைபிடித்த தொண்டி மீனவர்கள் 2 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆவணங்கள் இல்லாததால் ஒருவர் சிறையில் தவிக்கிறார்.

ஈரான் கடற்படை சிறைபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் வசந்த் (வயது 24), பிரகதீஸ்வரன்(24), ஜீவா(25) ஆகிய 3 பேரும் கடந்த ஆண்டு மீன்பிடித்தொழில் செய்வதற்காக துபாய்க்கு சென்றனர். அங்கு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்ட 3 பேரும் கடந்த மாதம் 8-ந்தேதி அன்று வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது இந்த மீனவர்கள் ஈரான் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்ததாக கூறி ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த நம்புதாளை மீனவர்கள் ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட நம்புதாளை மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் கலெக்டர் வாயிலாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

2 பேர் விடுவிப்பு

இந்நிலையில் கடந்த 3-ந்தேதி ஈரான் சிறையில் இருந்து நம்புதாளை மீனவர்கள் வசந்த் மற்றும் பிரகதீஸ்வரன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஆவணங்கள் குளறுபடி காரணமாக மீனவர் ஜீவாவின் விடுதலையில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அவர் மட்டும் தொடர்ந்து ஈரான் சிறையில் கைதியாக இருந்து வருகிறார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் நம்புதாளையை சேர்ந்த சக மீனவரான ஜீவாவின் விடுதலைக்காக அந்த நாட்டிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்திய தூதரகத்தின் தகவல் அடிப்படையில் ஜீவாவின் ஆவணங்கள் தொடர்பாக மீன் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் நம்புதாளை கிராமத்தில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். ஜீவா தொடர்பான ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்கப்படும் நிலையில் ஜீவாவும் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்