கரூர்
வேன், லாரி மோதிக்கொண்ட விபத்தில் மாட்டு வியாபாரிகள் 2 பேர் உடல் நசுங்கி பலி
|கரூர் அருகே வேன், லாரி மோதிக்கொண்ட விபத்தில் மாட்டு வியாபாரிகள் 2 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.
வியாபாரிகள்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 31). அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன் (42). 2 பேரும் மாட்டு வியாபாரிகள் ஆவர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று மாடுகள் வாங்குவதற்காக ஒரு மினி வேனில் மீமிசலில் இருந்து கரூர் வழியாக திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை மாரியப்பன் ஓட்டினார். சரவணன் அருகில் அமர்ந்து வந்தார்.
வேன்-லாரி மோதல்
இந்த வேன் நேற்று அதிகாலை கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் தண்ணீர் பாலம் பகுதியில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.அப்போது எதிரே கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் (33) என்பவர் பாலக்காட்டில் இருந்து அரியலூரில் உள்ள ஒரு சிமெண்டு தொழிற்சாலைக்கு ஒரு லாரியில் சாக்குப்பைகளை ஏற்றி கொண்டு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லாரியும், வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொண்டது. இதில் வேனின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.
2 பேர் பலி
இதில் வேனின் இடிபாடுகளில் சிக்கிய மாரியப்பன், சரவணன் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்ேபரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் வேனில் சிக்கி இறந்த 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிேயாடிவிட்ட லாரி டிரைவர் ஜோசப்பை வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த விபத்தால் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.