< Back
மாநில செய்திகள்
குன்றத்தூர் அருகே முந்திச்செல்ல முயன்றபோது 2 கார்கள் மோதி விபத்து; கல்லூரி மாணவர் காயம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

குன்றத்தூர் அருகே முந்திச்செல்ல முயன்றபோது 2 கார்கள் மோதி விபத்து; கல்லூரி மாணவர் காயம்

தினத்தந்தி
|
12 Dec 2022 2:28 PM IST

குன்றத்தூர் அருகே முந்திச்செல்ல முயன்றபோது 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர் காயம் அடைந்தார். மேலும் 2 கார்கள் சேதம் அடைந்தன.

கார்கள் மோதல்

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனாபிரபு (வயது 22). இவர், வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர், கல்லூரியில் தன்னுடன் படித்து வரும் சக மாணவர்களான சையது, லுகேஸ்வரன், மனிஷ் ஆகியோருடன் காரில் பூந்தமல்லியில் இருந்து தாம்பரம் நோக்கி வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.

குன்றத்தூர் அருகே சென்றபோது முன்னால் சென்ற மற்றொரு காரை முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 கார்களும் மோதிக்கொண்டன.

கல்லூரி மாணவர் காயம்

இதில் கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார், சாலையோர பள்ளத்துக்குள் பாய்ந்தது. இதில் கார் நொறுங்கியது. காரில் வந்த சையது என்ற மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

மற்றொரு காரும் பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், காயம் அடைந்த மாணவனை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்தில் 2 கார்களிலும் வந்த மற்ற யாருக்கும் காயம் ஏதும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் மேலும் 2 கார்கள் சேதம் அடைந்தது. விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்