< Back
மாநில செய்திகள்
நசரத்பேட்டை மற்றும் நெற்குன்றம் பகுதியில் 2 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

நசரத்பேட்டை மற்றும் நெற்குன்றம் பகுதியில் 2 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
11 July 2022 3:58 PM GMT

நசரத்பேட்டை மற்றும் நெற்குன்றம் பகுதியில் 2 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கார் தீப்பிடித்து எரிந்தது

பூந்தமல்லியை சேர்ந்தவர் காமேஷ். இவர், நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். ஓட்டலின் முன்புறம் காரை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்றுவிட்டார்.

அப்போது அவரது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். உடனடியாக ஓட்டலில் இருந்த தீயணைப்பான் கருவி மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.

காரில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததா? என நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்தபோது காமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓட்டலுக்குள் சென்றுவிட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மற்றொரு சம்பவம்

அதேபோல் முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (35). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லியில் இருந்து முகப்பேரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நெற்குன்றம் பகுதியில் சென்றபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன், நடுரோட்டில் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அதற்குள் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது.

இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்