< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலி

தினத்தந்தி
|
8 Aug 2022 2:04 PM IST

மொபட்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிலைத்தடுமாறி விழுந்த 2 சிறுவர்கள், டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.

சென்னை,

மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கருநிலம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருடைய மனைவி தேன்மொழி. இவர்களுடைய மகன்கள் லோகேஷ் குமார் (வயது 8), சித்தார்த் (4).

மறைமலைநகரில் உள்ள தனியார் பள்ளியில் லோகேஷ்குமார் 2-ம் வகுப்பும், சித்தார்த் எல்.கே.ஜி.யும் படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை தேன்மொழி தனது மகன்கள் 2 பேரையும் தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு கருநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கருநிலம் கிராமம் அருகே செல்லும்போது முன்னால் சென்ற டிராக்டரை தேன்மொழி முந்திச்செல்ல முயன்றார். அப்போது திடீரென எதிர்ப்புறமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் இவர்களது மொபட் மீது மோதியது.

சிறுவர்கள் பலி

இதில் மொபட்டில் வந்த தேன்மொழி, லோகேஷ்குமார், சித்தார்த் ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது டிராக்டரில் இணைக்கப்பட்ட டிரெய்லரின் பின்புற சக்கரத்தில் 3 பேரும் சிக்கிக்கொண்டனர். இதில் சிறுவன் சித்தார்த், தனது தாய் கண் எதிரேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தான். பலத்த காயம் அடைந்த லோகேஷ்குமார், சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக இறந்தான். படுகாயம் அடைந்த தேன்மொழி, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் அண்ணன், தம்பி இருவரும் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மட்டுமின்றி கருநிலம் கிராமத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்