சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர் உட்பட 2 பேர் கைது
|ஆசிரியர் மற்றும் வாலிபரால் பாதிப்புக்கு ஆளான சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அபிமணி (வயது 22). இவர் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உடற்கல்வி ஆசிரியரான ஹெரால்டு சகாயராஜ் (52) என்பவரிடம் முறையிட்டுள்ளார்.
இதையடுத்து, ஹெரால்டு சகாயராஜ், அந்த மாணவியை விசாரிப்பது போல் தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவரை பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சோர்வாக காணப்பட்ட சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதனைதொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் பள்ளி தலைமை ஆசிரியர் இது குறித்து விசாரிக்க தாமதப்படுத்தியதால் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பு எண் 1098 எண்ணிற்கு தொடர்பு கொண்டு சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் வந்து விசாரணை செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து அபிமணி மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.