< Back
மாநில செய்திகள்
நாவலூரில் டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 2 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

நாவலூரில் டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
12 April 2023 1:03 PM IST

நாவலூரில் டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செம்மஞ்சேரி அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 47) இவர் நேற்று முன்தினம் தன்னுடைய ஷேர் ஆட்டோவில் நாவலூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்றார்.

மது பாட்டிலை வாங்கிக்கொண்டு தன்னிடம் இருந்த ரூ.500- ஐ கொடுத்தார். டாஸ்மாக் கடை ஊழியர் ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் அடைந்து கேட்டபோது லோகநாதன் ஆட்டோவை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார்.

பின்னர் ஆட்டோவை எடுக்க லோகநாதன் சென்றபோது டாஸ்மாக் கடை ஊழியர்கள் தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லோகநாதனை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் அவர் வைத்திருந்த 2 ஐநூறு ரூபாய் கள்ள நோட்டை கைப்பற்றினர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவரது நண்பரான கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியை சேர்ந்த எபினேசன் (வயது 43) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரிடம் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 41 ஆயிரம் இருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

மேலும் இருவரும் அவர்களது வீட்டில் பதுக்கி வைத்திருந்த கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடம் இருந்தும் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் லோகநாதன், எபிநேசன் இருவரையும் ைகது செய்தனர்.

கைதான இருவரும் செங்கல்பட்டை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரிடம் இருந்து கள்ளநோட்டை வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். தாழம்பூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்