கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில்செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
|கள்ளக்குறிச்சியில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி,
கச்சிராயப்பாளையம் அருகே மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 53). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பளையம் சாலையில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, பஸ்சில் சேலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கள்ளக்குறிச்சி வந்த அவர்,தனது மோட்டார் சைக்கிளை எடுக்க பஸ் நிலையத்தில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது நான்குமுனை சந்திப்பு அருகே சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், காமராஜிடம் இருந்த செல்போனை பறித்து சென்றுவிட்டனர்.
இது குறித்து காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனா்.
அதில், கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் மகன் விக்ரம் (24), நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நவீன் (19) என்பது தெரிவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.