செங்கல்பட்டு
சித்தாமூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது
|சித்தாமூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சித்தாமூர் அருகே பொலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நளினி (வயது 35). இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆய்வக உதவியாளராக 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர், கடந்த 23-ந் தேதி பணி முடிந்து இரவு தனது இருசக்கர வாகனத்தில் மேல்மருவத்தூரில் இருந்து வீடு நோக்கி சென்றுள்ளார். அப்போது, சித்தாமூர் மேல்மருவத்தூர் சாலையில் உள்ள அனந்தபுரம் கிராமம் அருகே வந்த போது, நளினியை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர், அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது, பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் தப்பி ஓடிய மதுராந்தகம் அருகே சூரக்குட்டை பகுதியை சேர்ந்த சீமான் (24) மற்றும் சிறுவன் உள்ளிட்ட 2 பேர் பிடிபட்டனர்.
இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த சித்தாமூர் போலீசார், சீமானை மதுராந்தகம் சிறையிலும், சிறுவனை செங்கல்பட்டு சிறார் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.