செங்கல்பட்டு
மதுராந்தகம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
|மதுராந்தகம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை உத்தரவின் பேரில் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை செய்தபோது மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு ஏரிக்கரை அருகே உள்ள வேப்பமரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மதுராந்தகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதையடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மதுராந்தகத்தை அடுத்த சாத்தமை கிராமத்தை சேர்ந்த ராகேஷ் (வயது 19), மதுராந்தகம் அடுத்த மேல்மா கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (23) ஆகியோர் ஏரிக்கரை பகுதியில் சுமார் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை ஒரு பையில் வைத்து விற்பனைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.