காஞ்சிபுரம்
வாலாஜாபாத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
|வாலாஜாபாத்தில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் வாலாஜாபாத் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வாலாஜாபாத் ரெயில் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வாலாஜாபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் ரெயில் நிலையம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மறைவிடத்தில் 2 வாலிபர்கள் கஞ்சா பொட்டலத்தை பிரித்து விற்பனை செய்வதற்காக தயார் செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வாலாஜாபாத் தாலுகா அய்யம்பேட்டை கிராமம் சத்யா நகரை சேர்ந்த சஞ்சய் (வயது 22), புத்தகரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வசந்த் (22) என்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.