செங்கல்பட்டு
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
|தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரையும் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீசார் நேற்று முன்தினம் ஊரப்பாக்கம் ரேவதிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபடுவதை பார்த்தவுடன் வேகமாக செல்ல முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக அந்த காரை மடக்கி பிடித்து விசாரித்த போது அந்த காரில் இருந்த 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். உடனடியாக போலீசார் காரில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காரில் இருந்த 2 பேரையும் போலீசார் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஊரப்பாக்கம் ரேவதிபுரம் பகுதியை சேர்ந்த தங்கதுரை (வயது 43), மணிராஜன் (32) என்பதும் இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,500 ரொக்க பணம், 2 செல்போன் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
,