திருவள்ளூர்
மது போதையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜீப்பை வழி மறித்து 'லிப்ட்' கேட்ட 2 பேர் கைது
|மது போதையில் திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்த ஜீப்பை வழி மறித்து ‘லிப்ட்’ கேட்டு ரகளை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா திருவள்ளூரை சுற்றியுள்ள பகுதியில் நேற்று போலீஸ் ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திருப்பாச்சூர் அருகே வரும்போது அங்கு மது போதையில் இருந்த பிராயங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 28), யோபு என்ற நிஷாந்த் (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் திருவள்ளூர் - திருத்தணி மெயின் ரோட்டில் செல்லும் வாகனங்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் சைரன் போட்டுக்கொண்டு வந்த உதவி போலீஸ் சூப்பிரண்டுவின் ஜீப்பை அவர்கள் வழி மறித்து தங்களுக்கு 'லிப்ட்' தர வேண்டும் என கூறி ரகளை செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா மது போதையில் இருந்த 2 பேரை பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தார். இவர்களுடன் இருந்த 17 வயதுடைய சிறுவனை எச்சரித்து அவனுடைய பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜீப்பை வழிமறித்து 2 பேர் லிப்ட் கேட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.