< Back
மாநில செய்திகள்
அதிக வட்டி கேட்டு வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

அதிக வட்டி கேட்டு வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
8 Jun 2023 5:13 PM IST

அதிக வட்டி கேட்டு வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மா.பொ.சி., சாலையில் வசித்து வருபவர் அருண்குமார் (வயது 26). இவர் கடந்த மாதம் 13-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை திருத்தணி மேல் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (23) என்பவரிடம் ரூ.10 ஆயிரத்துக்கு அடமானம் வைத்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அருண்குமார் ரூ.10 ஆயிரம் பணத்தை ஜெயக்குமாரிடம் கொடுத்து வண்டியை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஜெயக்குமார் ரூ.15 ஆயிரம் கொடுத்தால் வண்டி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. பின்னர் அங்கிருந்து அருண்குமார் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் ஜெயக்குமார் தனது நண்பர்களான யுவராஜ், ரவி, மற்றொரு அருண்குமார் என்பருடன் சேர்ந்து அருண்குமார் வீட்டிற்குச் சென்று அவரை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அருண்குமாரை உறவினர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அருண்குமாருக்கு ஒரு கண் பார்வை இழந்ததாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் யுவராஜ், ரவி, அருண்குமார், ஜெயக்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், அருண்குமார் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்