தென்காசி
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது
|தென்காசியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி புதிய பஸ்நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் மற்றும் போலீஸ்காரர் அல்போன்ஸ் ராஜா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திருநங்கைகளிடம் 2 பேர் தகராறு செய்து கொண்டிருந்தனர். ராஜா சிங் மற்றும் போலீஸ்காரர் அவர்களை சத்தம் போட்டு இது குறித்து கேட்டனர். உடனே அந்த 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கீழே தள்ளி, கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன், 2 பேரையும் சத்தம் போட்டு பிடித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று அவர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நெற்கட்டும் செவல் ஊரைச் சேர்ந்த மாரிசாமி மகன் முத்துக்குமார் (வயது 26), கிருஷ்ணன் மகன் சுப்பையா (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.