தென்காசி
பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
|ஆழ்வார்குறிச்சி அருகே பஸ் டிரைவரை தாக்கிய 2 பேரை கைது
கடையம்:
தென்காசியில் இருந்து சம்பன்குளத்திற்கு தடம் எண் 30 ஏ என்ற பஸ் இயங்கி வருகிறது. சம்பவத்தன்று இந்த பஸ்சை கடையநல்லூர் அருகே உள்ள பால மார்த்தாண்டத்தை சேர்ந்த சிவராமன் மகன் ராமநாதன் (வயது 59) என்பவர் ஓட்டி வந்தார். இரவு 7 மணிக்கு சம்பன்குளம் சென்று திரும்பி வரும்போது கோவிந்தபேரியை சேர்ந்த மாடசாமி மகன் இசக்கிப்பாண்டி என்பவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் டிரைவர் ஹாரன் அடித்ததால் மாடுகள் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இசக்கிப்பாண்டி (40), அவரது மகன் கார்த்திக் (19) மற்றும் கருப்பசாமி மகன் வேல்முருகன் (21) ஆகியோர் டிரைவர் ராமநாதனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிப்பாண்டி, வேல்முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய கார்த்திக்கை தேடி வருகின்றனர்.