கடலூர்
திட்டக்குடி அருகே ஐடிஐ மாணவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் 2 பேர் கைது
|திட்டக்குடி அருகே ஐ.டி.ஐ. மாணவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி அருகே உள்ள போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆதித்யா(வயது 16). இவர், திட்டக்குடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில்(ஐ.டி.ஐ.) முதலாமாண்டு படித்து வருகிறார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆதித்யா மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து பெரம்பலூர் மாவட்டம் காளிங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் வினோத்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய மோட்டார் சைக்கிளையும் அவர்கள் சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக வினோத்குமாருக்கும், ஆதித்யாவிற்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கடத்தல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஆதித்யா வீட்டில் இருந்தார். அப்போது அங்கு தனது நண்பரான மணிகண்டனுடன் வந்த வினோத்குமார், மோட்டார் சைக்கிளில் ஆதித்யாவை காளிங்கராயநல்லூருக்கு கடத்தி சென்றார்.
பின்னர் ஆதித்யாவின் தந்தையை செல்போனில் தொடர்பு கொண்ட வினோத்குமார், எனது மருத்துவ செலவுக்கான பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் சேதமடைந்ததற்கான பணத்தை கொடுத்தால், உங்கள் மகனை விட்டுவிடுகிறேன். இல்லையெனில் கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டினார். இதுகுறித்து ஆதித்யாவின் தாய் பச்சையம்மாள், ஆவினங்குடி போலீசில் புகார் கொடுத்தார்.
2 பேர் கைது
இதையடுத்து போலீசார், பச்சையம்மாளிடம் நீங்கள் பணத்தை எடுத்து செல்லுங்கள், நாங்கள் பின் தொடர்ந்து வந்து அவர்களை பிடித்து விடுகிறோம் என தெரிவித்தனர். அதன்பேரில் பச்சையம்மாள் ரூ.25 ஆயிரத்துடன் காளிங்கராயநல்லூருக்கு சென்றார். பின்னர் வினோத்குமார் கூறிய இடத்திற்கு சென்று பணத்தை கொடுக்க முயன்றபோது அங்கு வந்த போலீசார் வினோத்குமார் மற்றும் மணிகண்டனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தி வைத்திருந்த ஆதித்யாவையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.