சேலம்
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
|சேலத்தில் கொலை மிரட்டல், லாட்டரி விற்ற முதியவர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ஜீவன்ராஜ் (வயது 23). கடந்த மார்ச் மாதம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த ஒருவரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி உள்ளார். இதை தட்டி கேட்டவரை கத்தியால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவன்ராஜை கைது செய்தனர். இதில் ஜாமீனில் வெளியில் வந்த அவர் வாய்க்கால் பட்டறை பகுதியில் தள்ளுவண்டி வியாபாரியிடம் சமோசா வாங்கி உள்ளார். பின்னர் பணம் கேட்ட வியாபாரியை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதையடுத்து 2-வது முறையாக கைது செய்யப்பட்டார். இதேபோன்று அம்மாபேட்டையை சேர்ந்தவர் குபேந்திரன் (63). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து கொலை மிரட்டல், லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்த 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள ஜீவன்ராஜ், குபேந்திரன் ஆகிய 2 பேரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.