< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் திருட்டு
திருவாரூர்
மாநில செய்திகள்

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் திருட்டு

தினத்தந்தி
|
10 July 2023 12:45 AM IST

மன்னார்குடியில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் திருடிச்சென்ற ஆந்திர வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பணப்பை திருட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பிருந்தா நகரை சேர்ந்தவர் ராஜகுமாரி (வயது62). இவர் கடந்த 6-ந் தேதி மன்னார்குடி வினோபாஜி தெருவில் உள்ள அடகு கடைக்கு நகை அடகு வைக்க தனது மகனுடன் சென்றார். அங்கு தங்க நகையை ரூ.1 லட்சத்துக்கு அடகு வைத்துவிட்டு பணத்துடன் கடையை விட்டு வெளியே வந்தார்.

அப்போது அங்கு வந்த 2 பேர் ராஜகுமாரியின் முதுகில் காகம் எச்சமிட்டு இருப்பதாக கூறினர். இதனை நம்பிய ராஜகுமாரி பணப்பையை தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளின் இருக்கையில் வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட 2 பேரும் ரூ.1 லட்சம் இருந்த பையை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். கவனத்தை திசை திருப்பி பணத்தை 2 பேர் நூதன முறையில் திருடிச்சென்றதால் ராஜகுமாரியும், அவருடைய மகனும் அதிர்ச்சி அடைந்தனர்.

2 பேரிடம் விசாரணை

இதுகுறித்து மன்னார்குடி போலீசில் ராஜகுமாரி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மன்னார்குடி பந்தலடி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் பிடித்தனர். இவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ விசாரணை நடத்தினர்.

ஆந்திராவை சேர்ந்தவர்கள்

இதில் அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கட்டரூலா கிராமத்தை சேர்ந்த செல்லா பிரசாந்தி (31), ரவி (25) ஆகியோர் என்பதும், இவர்கள் இருவரும் நூதன முறையில் ரூ.1 லட்சத்தை ராஜகுமாரியிடமிருந்து திருடிச்சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மன்னார்குடி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்