< Back
மாநில செய்திகள்
சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூடுதலாக 2 நகரும் படிக்கட்டுகள் - பயன்பாட்டுக்கு வந்தன
சென்னை
மாநில செய்திகள்

சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூடுதலாக 2 நகரும் படிக்கட்டுகள் - பயன்பாட்டுக்கு வந்தன

தினத்தந்தி
|
4 April 2023 12:05 PM IST

சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்ட 2 நகரும் படிக்கட்டுகள் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் பச்சை மற்றும் நீளம் என்று 2 வழித்தடங்களில் மொத்தம் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. விம்கோ நகர் வரை சேவை நீட்டிப்பு செய்யப்பட்ட பின்னர் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1½ லட்சத்தையும் தாண்டி காணப்படுகிறது.

குறிப்பாக சென்டிரல், எழும்பூர் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சென்டிரலில் இருந்து பிற மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் செல்ல ஏராளமானோர் வருவதால் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வருவதால் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பயணிகள் வெளியே செல்வதில் சிரமம் அடைந்து வந்தனர்.

பயணிகளின் சிரமத்தை தவிர்க்க கூடுதல் நகரும் படிக்கட்டுகளை அமைத்துத்தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். எனவே, பயணச்சீட்டு வழங்கும் தளத்தில் இருந்து நடைமேடை 1 மற்றும் 2-க்கு சென்றுவர 2 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த 2 நகரும் படிக்கட்டுகளும் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இதனால், சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் பெருமளவில் தவிர்க்கப்பட்டு உள்ளது.

இதேபோல, பயணிகள் வசதிக்காக மேலும் 22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றது.

இதில், சின்னமலை உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு ஒரு நகரும் படிக்கட்டும், கிண்டி, நங்கநல்லூர் உள்ளிட்ட 7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தலா 2 நகரும் படிக்கட்டுகளும், அண்ணாநகர் கோட்டூர்புரம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 3 நகரும் படிக்கட்டுகளும், வடபழனி, மீனம்பாக்கத்தில் 4 நகரும் படிக்கட்டுகளும், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 5 நகரும் படிக்கட்டுகளும் புதிதாக அமைக்கப்பட இருப்பதாக மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்