தஞ்சாவூர்
1 முதல் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் உற்சாகம்
|1 முதல் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் உற்சாகம்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி 1 முதல் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். அவர்களுக்கு இனிப்பு, பூ கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.
பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்கு பிறகு தஞ்சை மாவட்டத்தில் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.), 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றன.
பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர். மழலையர் வகுப்பில் சேர்க்க குழந்தைகளை பெற்றோர்கள் ஸ்கூட்டரிலும், கார்களில் பள்ளிகளுக்கு அழைத்து வந்தனர். குழந்தைகளும் தோளில் பேக்குகளை தொங்க போட்டு கொண்டு உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இன்முகத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.
உடற்பயிற்சி
பல பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சாக்லெட், பூ கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர். இதனால் மாணவர்களும் உற்சாகத்துடன் வகுப்பறைகளுக்கு சென்றனர். பள்ளிகள் தொடங்கிய முதல் ஒரு வாரத்திற்கு பாடத்திட்டங்களை நடத்தாமல் புத்துணர்ச்சிக்கான வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தனர். அதன்படி பள்ளிகளில் புத்துணர்ச்சிக்கான வகுப்புகள் நடத்தப்பட்டன. தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு உடற்பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும் கிராமப்பகுதிகளில் இருந்து பஸ்கள் மூலம் தஞ்சை பழைய பஸ் நிலையத்திற்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் இனிப்பு, பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேலும் மாணவர்கள் சிலருக்கு பேனாவும் வழங்கினார். பின்னர் அவர், தஞ்சை தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வடிவேல் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
பாடப்புத்தகங்கள்
தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., தமிழகஅரசின் இலவச பாடப் புத்தகங்களை வழங்கினார். அப்போது அவர், எந்த வகுப்பு படிக்கிறீர்கள்? எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள்? போன்ற பல்வேறு விவரங்களை மாணவிகளிடம் கேட்டறிந்தார். மேலும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி, பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா மற்றும் ஆசிரியைகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை
தஞ்சை மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவர் சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்றது. தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்ப்பதற்காக தங்களது குழந்தைகளை அழைத்து கொண்டு பெற்றோர்கள் பலர் வந்து இருந்தனர்.