திருநெல்வேலி
19,854 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
|நெல்லை மாவட்டம் முழுவதும் 19 ஆயிரத்து 854 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். வினாத்தாள் எளிதாக இருந்ததாக மகிழ்ச்சியுடன் கூறினர்.
நெல்லை மாவட்டம் முழுவதும் 19 ஆயிரத்து 854 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். வினாத்தாள் எளிதாக இருந்ததாக மகிழ்ச்சியுடன் கூறினர்.
பிளஸ்-2 தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் 73 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 183 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் 11 ஆயிரத்து 52 பேரும், மாணவர்கள் 10 ஆயிரத்து 51 பேரும் என மொத்தம் 21 ஆயிரத்து 103 பேர் பிளஸ்-2 தேர்வெழுத விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் மாணவிகள் 10 ஆயிரத்து 543 பேரும், மாணவர்கள் 9 ஆயிரத்து 311 பேரும் என மொத்தம் 19 ஆயிரத்து 854 பேர் நேற்று தேர்வு எழுதினர். மாணவர்கள் 740 பேரும், மாணவிகள் 509 பேரும் என மொத்தம் 1,249 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இதுதவிர சிறைக்கைதிகள், தனித்தேர்வர்களுக்காக 4 தனியார் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு நடந்தது.
1,150 ஆசிரியர்கள்
பிளஸ்-2 தேர்வையொட்டி மாநகரில் 2 பள்ளிகள், மாவட்டத்தில் சேரன்மகாதேவி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய இடங்களில் 3 பள்ளிகளில் வைக்கப்பட்டு இருந்த வினாத்தாள் கட்டுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அந்த இடங்களில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு வாகனங்கள் மூலமாக வினாத்தாள்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது. தேர்வு பணிகளில் சுமார் 1,150 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
7 பறக்கும் படை
தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 7 பறக்கும்படையினர் அமைக்கப்பட்டு கண்காணித்தனர். ஒவ்வொரு பறக்கும் படைக்கும் தலைமை அலுவலர் மற்றும் தலா ஒரு ஆண், பெண் அலுவலர் இடம் பெற்றிருந்தனர். மேலும் தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 73 நிலையான படையினரும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
மாவட்டத்தில் தேர்வின்போது சிறப்பு அனுமதி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சொல்வதை எழுதும் பணிக்காக 187 பேர் நியமிக்கப்பட்டனர். சிறப்பான அனுமதி பெற்ற மாணவர்களுக்கான தேர்வு எழுதும் முறையை கண்காணிக்க 4 அறைக்கு ஒரு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி வீதம் நியமிக்கப்பட்டனர்.
தேர்வினை நெல்லை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராமசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி ஆகியோர் கண்காணித்தனர்.
கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு
பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ்-2 தேர்வை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக தேர்வு எழுத சென்ற பல மாணவ-மாணவிகள் அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவிலில் ஏராளமான மாணவ-மாணவிகள் வழிபட்ட பின்னர் தேர்வெழுத சென்றனர்.
பிளஸ்-2 தமிழ் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள், வினாத்தாள் கேள்விகள் எளிதாக இருந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.