திருநெல்வேலி
பிளஸ்-1 தேர்வை 19,781 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்
|நெல்லை மாவட்டத்தில் பிளஸ் -1 தேர்வை 19,781 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.
பாளையங்கோட்டை:
நெல்லை மாவட்டத்தில் பிளஸ் -1 தேர்வை 19,781 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.
பிளஸ்-1 தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் நேற்று பிளஸ்-1 தேர்வு தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு தொடங்கியதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.
பிளஸ்-2 தேர்வுக்காக அமைக்கப்பட்டு இருந்த அதே 73 மையங்களில் பிளஸ்-1 தேர்வு தொடங்கி நடைபெற்றது.
19,781 பேர் எழுதினர்
சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 12 மையங்களிலும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 29 மையங்களிலும், நெல்லை கல்வி மாவட்டத்தில் 28 மையங்களிலும் தேர்வு நடைபெற்றது.
இதுதவிர 4 மையங்கள் சிறைக்கைதிகள் உள்பட தனிதேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்வை மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 609 மாணவர்கள், 11 ஆயிரத்து 172 மாணவிகள் என மொத்தம் 19,781 பேர் எழுதினர். நேற்று தொடங்கிய இந்த தேர்வு வருகிற 5-ந்தேதி வரை நடக்கிறது.
கலெக்டர் ஆய்வு
தேர்வையொட்டி நேற்று காலை 7 மணி முதல் 16 வாகனங்கள் மூலம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ள 69 மையங்களுக்கும் வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து சில மையங்களில் தேர்வினை கலெக்டர் கார்த்திகேயன், முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் தேர்வு பணிக்காக மொத்தம் 1, 968 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதில் அறை கண்காணிப்பாளர்களாக 1,507 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்.