< Back
மாநில செய்திகள்
195 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

195 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்

தினத்தந்தி
|
4 Dec 2022 12:15 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் மாநிலத்திலேயே அதிபட்சமாக 195 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி

மாற்றுத்திறனாளிகள் தின விழா

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரிபெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

முன்மாதிரியாக திகழ்ந்து...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அனைத்து திட்டங்களையும் கொண்டு சேர்த்திட அனைத்துத்துறை அலுவலர்களையும் அறிவுறுத்தியுள்ளேன். மாற்றுத்திறனாளியின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அனைத்து வங்கிகளும் கடனுதவி வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து தன்னம்பிக்கையோடு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி் திட்டத்தின் கீழ் அனைத்து நாட்களும் வேலை மற்றும் முழு ஊதியமும் வழங்கிட அறிவுறுத்தியுள்ளேன்.

260 பேருக்கு செல்போன்

மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 195 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 350 ஸ்கூட்டர்கள் ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. அவை வந்ததும் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்.

கடந்த ஆண்டு காது கேளாத, வாய் பேசாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், சுயதொழில் புரிபவர்கள் ஆகியோருக்கு 260 ஆண்ட்ராய்டு செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டுக்கு 360 செல்போன் ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.

சக்கர நாற்காலி

அதேபோல் தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீயூமோசன் எனப்படும் சிறப்பு சக்கர நாற்காலி அதிக ஒதுக்கீடு பெற்று வழங்கியது நமது மாவட்டத்தில் தான். எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளையும் பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகைகளில் சேவையாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள், தொண்டு நிறுவன ஊழியர்களுக்கு கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் பாராட்டு கேடயம் வழங்கினார்கள். இதில் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர் முரளிதரன், எலும்பு முறிவு, கண், காது, மூக்கு மருத்துவர்கள், மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளி நிறுவனர்கள், அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்