< Back
மாநில செய்திகள்
19,487 குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

19,487 குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு

தினத்தந்தி
|
28 July 2022 8:49 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் 19,487 குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 487 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஊட்டச்சத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்டம் முழுவதும் இதுவரை 747 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த முகாம்கள் மூலம் டி.என்.ஐ.சி.டி.எஸ் செயலியில் 81 ஆயிரத்து 677 குழந்தைகள் விவரம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 4 ஆயிரத்து 547 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையும், 14 ஆயிரத்து 940 குழந்தைகளுக்கு மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையும் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கடுமையான ஊட்டச்சத்து மற்றும் மிதமானஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி 3 வாரத்துக்குள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவ உதவி

இதில் 37 குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், 165 குழந்தைகளுக்கு சத்தான உணவு மற்றும் மருத்துவ உதவியும் அவசியம் என்றும், மீதம் உள்ள 19 ஆயிரத்து 285 குழந்தைகள் நல்ல நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. மருத்துவம் மற்றம் சத்தான உணவு தேவையானவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளின் விவரங்களை டி.என்.ஐ.சி.டி.எஸ் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. அந்த குழந்தைகளுக்கு வளர்ச்சி கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டு தொடர்ந்து 90 நாட்களுகக மருத்துவ சிகிச்சை மற்றும் சத்தான உணவு வழங்குதல் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு பேரீச்சம்பழம், கடலை மிட்டாய், எள்ளுமிட்டாய், இணைஉணவு, பிஸ்கட், வாழைப்பழம், பால், ராகிமால்ட் உள்ளிட்ட ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளது.

அங்கன்வாடி மையங்களில்...

மேலும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதோடு, அவர்களை பாதுகாக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு தெரிந்தால் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பரிசோதித்து, அவர்கள் வழங்கும் ஊட்டச்சத்து உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்