< Back
மாநில செய்திகள்
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் எங்கிருந்து இயக்கப்படுகின்றன - அமைச்சர் சிவசங்கர் கூறிய தகவல்
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் எங்கிருந்து இயக்கப்படுகின்றன - அமைச்சர் சிவசங்கர் கூறிய தகவல்

தினத்தந்தி
|
8 Jan 2024 11:37 PM IST

பொங்கல் பண்டிகையையொட்டி 19 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தம், பூந்தமல்லி புறவழிச்சாலை மாநகராட்சி பஸ் நிறுத்தம், கோயம்பேடு பஸ் நிலையம், கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையம் ஆகிய 6 இடங்களில் இருந்து பஸ்கள் புறப்படும்.

இதில் 12, 13, 14 ஆகிய 3 நாட்கள் வழக்கம்போல் இயக்கப்படும் 6,300 பஸ்களுடன், சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் 4,706, பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 6,476 பஸ்கள் என 13, 164 சிறப்பு பஸ்கள் என 19,484 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் செல்லும் அரசு விரைவு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் முனையம் மற்றும் கோயம்பேடு தவிர வேறு எங்கு இருந்தும் இயக்கப்படாது.

மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, செங்குன்றம் வழியாக ஆந்திரா பஸ்கள் இயக்கப்படும். கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கும், தாம்பரம் சானிடோரியம் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள்.

வள்ளூவர் குருகுலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து காஞ்சீபுரம், வேலூர், ஆரணி பஸ்கள் இயக்கப்படும். பூந்தமல்லி புறவழிச்சாலை பஸ் நிறுத்தத்தில் இருந்து வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சீபுரம் வழியாக திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஓசூர், திருத்தணிக்கும் பஸ்கள் இயக்கப்படும்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு பஸ்கள் இயக்கப்படும். கோவை, சேலம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை கோட்டத்தை சேர்ந்த பஸ்கள் வழக்கம்போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கரூர், மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திருவனந்தபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம், காரைக்குடி, மார்த்தாண்டம் ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு மட்டுமே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்கப்படும்.

மற்ற போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு செய்த, முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மேற்கண்ட 5 பஸ் நிலையங்களில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படும். கிளாம்பாக்கம், கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம் ஆகிய 3 இடங்களில் மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் செய்யப்படும். இணையதளத்திலும் பதிவு செய்துகொள்ளலாம்.

பொங்கல் முடிந்த பிறகு, பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தினமும் இயங்கும் 2,100 பஸ்களுடன் 4,830 சிறப்பு பஸ்கள் 3 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக 11,130 பஸ்கள் இயக்கப்படும். ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,459 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 17,589 பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

ஆம்னி பஸ்கள் தற்போது வழக்கம் போல் இயங்கும் இடத்தில் இருந்து இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும். ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போகக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லவதை தவிர்த்து திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லலாம்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்