சேலம்
வெறிநாய் கடித்து குதறியதில் 19 பேர் காயம்
|சூரமங்கலம்:-
சேலம் சூரமங்கலத்தில் வெறிநாய் கடித்து குதறியதில் 19 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
வெறிநாய் கடித்தது
சேலம் மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், நடந்து செல்லும் பொதுமக்களையும் துரத்தி துரத்தி கடிக்கின்றன. சேலம் சூரமங்கலம் அந்தோணிபுரம் ஓடை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. நேற்று அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய்க்கு திடீரென வெறி பிடித்தது.
சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்க தொடங்கியது. ஒருவரை அடுத்து ஒருவரை விடாமல் துரத்திச்சென்று கடித்தது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிலர் நாயை அங்கிருந்து விரட்ட முயன்றனர். அவர்களையும் அந்த நாய் விடாமல் கடித்து குதறியது.
19 பேர் காயம்
இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு அந்த நாயை அங்கிருந்து விரட்டி அடித்தனர். வெறிநாய் கடித்ததில் அந்தோணிபுரம் ஓடை பகுதியை சேர்ந்த நல்லம்மாள் (வயது 65), ராஜேஸ்வரி (22), ராணி (48), மார்டின் (60), பிரதீப் (27), ஆனந்த் (36), போலீஸ்காரர் ஜெயமுருகனின் தந்தை பாலகிருஷ்ணன் (62) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட மொத்தம் 19 பேர் காயம் அடைந்தனர்.
இவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசி போட்டு கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தடுக்க நடவடிக்கை
இதுகுறித்து அந்தோணிபுரம் ஓடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, 'தெருநாய்களின் தொல்லையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் சென்றாலும் நாய்கள் துரத்தி கடிக்கின்ற சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே நாய்களால் பெரிய அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.