இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 மீனவர்கள் விமானம் மூலம் வருகை
|இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விமானம் மூலம் வந்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் பகுதியில் இருந்து கடந்த மாதம் 14-ந் தேதி 3 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 19 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்த 19 மீனவர்களும் கடந்த மாதம் 27-ந் தேதி விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இன்று சென்னை விமான நிலையம் வந்திறங்கிய 19 மீனவர்களும் மீன்துறை அதிகாரிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை ஆகி வீடு திரும்பியதால் மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.