< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் சுனாமி தாக்கிய 18வது நினைவு தினம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி
மாநில செய்திகள்

தமிழகத்தில் சுனாமி தாக்கிய 18வது நினைவு தினம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி

தினத்தந்தி
|
26 Dec 2022 1:41 PM IST

தமிழகத்தில் சுனாமி தாக்கிய 18வது நினைவு தினத்தை முன்னிட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை,

நாம் வாழும் பூமியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிலம். மீதி 2 பங்கு கடல்தான். 7 கண்டங்களாக பிரிந்துகிடக்கும் இந்த நிலப்பரப்பை எப்போதும் முத்தமிட்டுக் கொண்டிருப்பது கடல் அலைகள்தான். ஓய்வில்லாத இந்த அலைகளின் ஓசையை நித்தமும் கேட்டு மகிழ்வதுதான் கடலோர மீனவ மக்களின் ஆசை.

ஒவ்வொரு நாள் இரவிலும் அவர்களை தாலாட்டு இசை பாடி தூங்க வைப்பதே இந்த அலைகள்தான். அழகு என்றும் ஆபத்து என்று சொல்வார்களே, அதுபோல இந்த அழகான அலைகளும் ஆபத்தை ஏற்படுத்திய ஆண்டு 2004.

18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளை தாக்கியது. என்னமோ... ஏதோ... என்று கரையோர மக்கள் உயிர் பிழைக்க ஓடியும், இரக்கமில்லாத சுனாமி அரக்கன் வயது வித்தியாசமின்றி வாரிச் சுருட்டிக்கொண்டான்.

இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் மாண்டு போனார்கள். 43 ஆயிரத்து 786 பேரை காணவில்லை.தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.

அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். உயிர்ப்பலியை தாண்டி, பொருட்களின் சேத மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். சுனாமியின்போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம். கடலோரப் பகுதியில் அன்றைக்கு எழுந்த மரண ஓலம் அடங்க பல ஆண்டு காலம் ஆனது.

ஆனால், கடல் அலை போல இன்னும் துயரச் சுவடுகள்தான் மறையவே இல்லை. அன்றைக்கு சிறுவயதில் இறந்து போனவர்கள், உயிரோடு இருந்திருந்தால் இன்றைக்கு திருமணமாகி குடும்பமாக வாழ்ந்திருப்பார்கள். நடுவயதை ஒத்தவர்கள், பேரன்-பேத்தி என்று வாழ்வை ரசித்து வந்திருப்பார்கள்.

ஆனால், மாண்டவர்கள் என்றும் மீள முடியாது. அதுதான் இயற்கையின் இரக்கமற்ற நியதி. என்றாலும், 17 ஆண்டுகளாக கடற்கரையோரம் அந்த சோக கீதம் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.இன்றைக்கு சென்னை முதல் குமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள், கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, இறந்துபோனவர்களுக்காக அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சுனாமி 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



சுனாமி நினைவு தினத்தையையொட்டி மணக்குடி சுனாமி நினைவு இடத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆஞ்சலி செலுத்தினர்.



மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையார் மீனவ கிராமத்தில் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு நினைவிடத்தில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.



பூம்புகார் சுனாமி நினைவு தூணில் மாவட்ட கலெக்டர் லலிதா அஞ்சலி செலுத்தினார்.



வேளாங்கண்ணியில் சுனாமியால் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர்.



நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூரியில் கலெக்டர் அருண் தம்புராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



கொட்டில்பாட்டில் சுனாமியில் பலியானவர்கள் நினைவாக மவுன ஊர்வலம், நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம், மெழுகுவர்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


சுனாமி நினைவு தினத்தையொட்டி நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை ஒட்டிய உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, இடிந்தகரை உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை .







மேலும் செய்திகள்