திருப்பூர்
சரக்கு வாகனத்தில் 1,850 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
|திருப்பூரில் சரக்கு வாகனத்தில் 1,850 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
1,850 கிலோ ரேஷன் அரிசி
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி.காமனி உத்தரவின் பேரில் கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், கார்த்தி மற்றும் போலீசார் நேற்று திருப்பூர் பல்லடம் ரோடு டி.கே.டி.மில் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தின் பின்புறம் மூட்டை, மூட்டையாக 50 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. மொத்தம் 1,850 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேலும் வாகனத்தை ஓட்டி வந்த கோவை மாதம்பட்டி குப்பனூரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 32) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
சரக்கு வாகனம், ஸ்கூட்டர் பறிமுதல்
விசாரணையில், அவர் திருப்பூர், பொங்கலூர், உகாயனூர், பொல்லிகாளிப்பாளையம், கோவில்வழி, அய்யம்பாளையம், வீரபாண்டி சுற்றுவட்டார பகுதி மக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பின்னர் கள்ளச்சந்தையில் கேரள மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. சரக்கு வாகனம், 1,850 கிலோ ரேஷன் அரிசி, ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.