நாமக்கல்
பிளஸ்-2 தேர்வு 18,291 மாணவ, மாணவிகள் எழுதினர்
|நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிளஸ்-2 தமிழ் உள்ளிட்ட மொழி தேர்வை 18,291 மாணவ, மாணவிகள் எழுதினர். 716 பேர் தேர்வுக்கு வரவில்லை.
பிளஸ்-2 தேர்வு
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 7 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக 83 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் 357 பேர் தனிதேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு தனியாக 2 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
மொத்தமாக மாவட்டம் முழுவதும் 85 மையங்களில் நேற்று தமிழ் உள்ளிட்ட மொழி தேர்வு நடந்தது. இந்த தேர்வை 18 ஆயிரத்து 291 பேர் எழுதினர். தேர்வு எழுதிய நபர்களில் 146 பேர் மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் அருகே உள்ள வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேர்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ரவி ஆகியோரும் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்த தேர்வு பணியில் 85 முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் 1,463 பேர், பறக்கும் படை உறுப்பினர்கள் 197 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். முன்னதாக தேர்வு தொடங்கும் முன்பு முதன்மை கண்காணிப்பாளர்கள் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். ஒருசில நிமிடம் தியானத்திலும் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியதால் காலை முதலே ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மாணவ, மாணவிகள் கூட்டம் அலைமோதியது.