< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் கடத்தப்பட்ட 180 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் கடத்தப்பட்ட 180 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

தினத்தந்தி
|
20 July 2023 5:35 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து மினி லாரியில் கடத்த முயன்ற 180 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா கடத்தல்

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை வழியாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் கவரப்பேட்டை அடுத்த தச்சூர் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஒரு மினி லாரியை மடக்கி சோதனை செய்த போது அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

180 கிலோ சிக்கியது

இதையடுத்து மினி லாரியில் கொண்டு வரப்பட்ட மூட்டைகளில் இருந்த 180 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த நபரை பிடித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் வெங்கடாசலபதி (வயது 43) என்பதும், கஞ்சா மூட்டைகளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு கடத்த இருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் வெங்கடாசலபதியை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை தேடி வந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா (41) மற்றும் தெய்வம் (40) ஆகிய மேலும் 2 பேரை நேற்று கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்