கடலூர்
மீனவர் வீட்டில் ரூ.18 லட்சம் நகை கொள்ளை
|கடலூர் முதுநகரில் மீனவர் வீட்டில் ரூ.18 லட்சம் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் முதுநகர் ஏணிக்காரன்தோட்டத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 50), மீனவர். இவருடைய மனைவி துஷ்ஷா. நேற்று முன்தினம் மாலை செல்வக்குமார் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். அவரது மனைவி, சோனாங்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற செல்வக்குமார் நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு பதறிய அவர் வீட்டுக்குள் சென்ற போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.
ரூ.18 லட்சம்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வக்குமார், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து வந்து, அவரது வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் செல்வக்குமாரின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.18 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து, கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மீனவர் வீட்டில் நள்ளிரவில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மீனவர் வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.