< Back
மாநில செய்திகள்
தமிழகம் முழுவதும் 7,689 மையங்களில் நடந்தது குரூப்-4 தேர்வை 18½ லட்சம் பேர் எழுதினார்கள்
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 7,689 மையங்களில் நடந்தது குரூப்-4 தேர்வை 18½ லட்சம் பேர் எழுதினார்கள்

தினத்தந்தி
|
25 July 2022 5:32 AM IST

தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை 18½ லட்சம் பேர் எழுதினார்கள். 3½ லட்சம் பேர் எழுதவில்லை.

சென்னை,

397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், 1,901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

இதற்கு தமிழகம் முழுவதும் இருந்து 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை குரூப்-4 பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் ஒப்பிடும்போது இதுதான் அதிகபட்சமாக இருந்து இருக்கிறது. இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு 20 லட்சத்து 76 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்து இருந்ததுதான் அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து வேலைவாய்ப்புக்காக காத்திருந்த ஏராளமானோர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

7,689 தேர்வு மையங்களில் நடந்தது

இதன்படி, குரூப்-4 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் நேற்று நடந்தது. அதிகபட்சமாக சென்னையில் 503 தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வை எழுதினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 12.30 மணியுடன் முடிவடைந்தது.

இதற்காக தேர்வர்களை காலை 8.30 மணியில் இருந்து தேர்வு மையங்களுக்கு வர அறிவுறுத்தப்பட்டனர். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்வர்களுக்கு வெளியிடப்பட்டு இருந்த ஹால் டிக்கெட்டில் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருந்தது. ஹால் டிக்கெட்டில் தெரிவித்திருந்தபடி, தேர்வு மையங்கள் சரியாக 9 மணிக்கு மூடப்பட்டன.

வினாத்தாள் எப்படி இருந்தது?

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தேர்வு நடைபெறுவதால் தேர்வர்கள் அனைவரையும் முககவசம் அணிந்துவரும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அந்தவகையில் முககவசம் அணிந்துவந்த தேர்வர்களை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். கண்காணிப்பு பணிக்காக ஒரு தேர்வு மையத்துக்கு ஒரு ஆய்வு அதிகாரி வீதம் 7 ஆயிரத்து 689 அதிகாரிகளும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 534 பறக்கும் படையினரும் நேற்று நடந்த தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

தேர்வு பிற்பகல் 12.30 மணிக்கு முடிந்தது. தேர்வை எழுதிய தேர்வர்களிடம் வினாத்தாள் எப்படி இருந்தது? என்று கேட்டபோது, 'கட்டாய தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்ததாகவும், பொது பாடப்பிரிவு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததாகவும், யு.பி.எஸ்.சி. தேர்வில் கேட்கப்படும் மறைமுக வினாக்கள் போல சில வினாக்கள் இடம்பெற்றிருந்ததாகவும்' தெரிவித்தனர்.

வினாத்தாளில் '8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?' என்ற வினாவால் தேர்வர்கள் சற்று குழப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த திருமண உதவித்தொகை திட்டம் தற்போது பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்டு இருக்கிறதே என்று தேர்வர்கள் கூறினர்.

3½ லட்சம் பேர் வரவில்லை

குரூப்-4 தேர்வுக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக தேர்வர்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனை பயன்படுத்தி தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்து சென்றனர். 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அதாவது 3 லட்சத்து 52 ஆயிரத்து 471 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது 84 சதவீதம் பேர்தான் இந்த தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ஒரு பணியிடத்துக்கு 253 பேர் வரை போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்வின் முடிவு வருகிற அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அதனைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும் அதே மாதத்தில் நடத்தப்பட்டு, நவம்பர் மாதத்துக்குள் கலந்தாய்வும் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்