கரூர்
ஆர்.டி.மலையில் வருகிற 17-ந்தேதி ஜல்லிக்கட்டு: காளைகளின் உரிமையாளர்கள்- மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வினியோகம்
|ஆர்.டி.மலையில் வருகிற 17-ந்தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதையடுத்து காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டது.
ஜல்லிக்கட்டு
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் ஆண்டுேதாறும் பொங்கல் பண்டிகையையொட்டி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டி கரூர் மாவட்டத்தில் இந்த ஓரு இடத்தில் மட்டும் தான் நடக்கும். இதையடுத்து இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஆர்.டி.மலையில் வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதையடுத்து முன்னேற்பாடு பணிகளை குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி கடந்த 27-ந்தேதி ஆய்வு செய்தார்.
இதையடுத்து நேற்று 2-வது நாளாக குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல், ஜல்லிக்கட்டு காளை வரும் பாதை, மாடுபிடி வீரர்களுக்கான பாதுகாப்பு இடம், பார்வையாளருக்கான பாதுகாப்பிடம், வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டு காளைகள் இறுதியாக சென்று நிற்கும் இடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து இடங்கள் மற்றும் மின் இணைப்பு வசதி, தீயணைப்பு வசதி, அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் ஆய்வு செய்தார்.
உத்தரவு
பின்னர் ஆர்.டி.மலையை சுற்றி உள்ள கிணறுகளில் தடுப்பு அமைக்க வேண்டும், தன்னார்வலர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக அனுமதி அளிக்கக்கூடாது, பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், அதிகாரிகள், விழா கமிட்டியாளர்களுக்கான மொபைல் டாய்லெட் (கழிப்பிடம்), குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும், வருகிற 16-ந்ேததிக்குள் அனைத்து ஏற்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும் என்று விழாக்குழுவினர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது கால்நடைத்துறையினர், போலீசார், வருவாய்த்துறையினர், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் உடனிருந்தனர்.
டோக்கன் வினியோகம்
மேலும், வருகிற 17-ந்தேதி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, அரியலூர், தஞ்சாவூர் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 800 காளைகளின் உரிமையாளர்கள், 400 மாடுபிடி வீரர்களுக்கும் தங்களது பெயர்களை கூறி டோக்கன்களை பெற்று சென்றனர். இதையடுத்து இந்த பணி முடித்து வைக்கப்பட்டது.