கடலூர்
கடலூர் மாவட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.17,931 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு:அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
|கடலூர் மாவட்டத்துக்கு ரூ.17,931 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட முன்னோடி வங்கியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
விவசாய கடன்
கடலூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.17,931 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.14 ஆயிரத்து 910 கோடியே 38 லட்சம் விவசாயத்திற்கும், ரூ.2 ஆயிரத்து 527 கோடியே 46 லட்சம் தொழிற்துறைக்கும், ரூ.493.16 கோடி இதர முன்னுரிமை கடன்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கினை வங்கிகள் அடைய வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் வங்கிகள் சிறப்பான செயல்பாட்டினை வழங்க வேண்டும். மேலும், உணவு பதப்படுத்துதல் தொழிற்கடன் திட்டம், புதிய தொழில் முனைவோர் கடன் திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கான தொழிற்கடன் திட்டம், தாட்கோ கடன் திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான கடன் திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களில் வங்கிகள் விரைந்து கடன் வழங்க வேண்டும்.
மகளிர் சுயஉதவிக்குழு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்துவார். ஆகவே வங்கிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கால தாமதமின்றி கடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா, தாட்கோ மேலாளர் மணிமேகலை, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கலைவாணி, கதர் கிராமத்தொழில் வாரிய உதவி இயக்குனர் அன்பழகன், மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்வடிவு, வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குனர் மணிகண்டன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக கிளை மேலாளர் இளவரசன் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.