வேலூர்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை 17,584 பேர் எழுதினர்
|வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 17,584 பேர் எழுதினார்கள். தேர்வு கூடங்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு செய்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 17,584 பேர் எழுதினார்கள். தேர்வு கூடங்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு செய்தனர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (நேர்முக தேர்வு பதவிகள் மற்றும் நேர்முக தேர்வு அல்லாத பதவிகள் - குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 20,855 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக வேலூர், குடியாத்தம் ஆகிய 2 தேர்வு மையங்களில் பள்ளி, கல்லூரிகள் என்று மொத்தம் 77 தேர்வு கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. 9 மணிக்கு பின்னர் வருபவர்கள் தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் காலை 7.30 மணி முதல் தேர்வர்கள் தேர்வு கூடத்துக்கு வரத்தொடங்கினார்கள். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், கைக்கெடிகாரம், புத்தகங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கலெக்டர் ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 17,584 பேர் எழுதினார்கள். 3,271 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேலூர் கொணவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி உள்பட பல்வேறு தேர்வு கூடங்களில் நடந்த தேர்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோன்று வேலூர் தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பார்வையிட்டார்.
இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 77 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு கூடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தேர்வர்கள் வாக்குவாதம்
காட்பாடி விருதம்பட்டில் உள்ள தனியார் பள்ளி தேர்வு கூடத்தில் தேர்வு எழுத வந்தவர்கள் நீண்ட நேரமாக அனுமதிக்கப்படவில்லை. அதனால் விரக்தி அடைந்த தேர்வர்கள் அங்குள்ள அலுவலரிடம் தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கக்கோரி வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு அவர்கள் 9 மணிக்கு அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினர். அதன்படி தேர்வர்கள் 9 மணிக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.