< Back
மாநில செய்திகள்
ஊட்டி அருகே 17 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்-  அதிகாரிகள் நடவடிக்கை
நீலகிரி
மாநில செய்திகள்

ஊட்டி அருகே 17 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்- அதிகாரிகள் நடவடிக்கை

தினத்தந்தி
|
1 Jun 2022 7:43 PM IST

ஊட்டி அருகே 17 வயது சிறுமியின் திருமணம் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்டது.

ஊட்டி

ஊட்டி அருகே 17 வயது சிறுமியின் திருமணம் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்டது.

சிறுமிக்கு திருமணம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைக்குந்தா பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும், உல்லத்தி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த அவர்களது பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது. எனவே திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்தன.

இதை தொடர்ந்து சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் 18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கு திருமணம் நடப்பது குறித்து சைல்டு லைன் அமைப்பிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் இதுகுறித்து சமூக நலத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து மாவட்ட சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் பிரவீனா தேவி தலைமையிலான அதிகாரிகள் திருமணம் நடக்க இருந்த மண்டபத்திற்கு சென்று மணமகன் மற்றும் மணமகள் பெற்றோரிடம் திருமணத்தை நிறுத்துமாறு கூறி பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து விட்டதால் பெற்றோர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதை மீறி திருமணம் செய்தால் மணமகன் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் எச்சரித்ததால் பெற்றோர்கள் சமாதானம் அடைந்தனர். இதனால் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இரு வீட்டாரும் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடைந்த பின் திருமணம் செய்து வைப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததால் அதிகாரிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்