ஈரோடு
17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
|17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோா்ட்டு தீர்ப்பளித்தது.
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோா்ட்டு தீர்ப்பளித்தது.
ஆட்டோ டிரைவர்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செம்படாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணேசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி, மகனை அழைத்துக்கொண்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் கணேசன் தனது தங்கை வீட்டில் வசித்து வந்தார்.
கணேசனின் தங்கையை பார்க்க 17 வயது சிறுமி அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியுடன் கணேசன் நட்பாக பழகி உள்ளார். இந்த பழக்கத்தின் மூலம் சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூருக்கு சிறுமியை கடத்தி சென்றார்.
திருமணம் செய்து பலாத்காரம்
பின்னர் ஒரு கரும்பு ஆலையில் கணேசன் வேலைக்கு சேர்ந்து, அங்குள்ள குடிசையில் இருவரும் தங்கியுள்ளனர். அப்போது கணேசன் சிறுமியை கட்டாய திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில், மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி மாணிக்கம்பாளையம் பிரிவு குறிச்சி சாலை பகுதியில் கணேசனும், 17 வயது சிறுமியும் நின்று கொண்டிருப்பதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போக்சோ சட்டத்தில் கைது
இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை, கணேசன் கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
20 ஆண்டு சிறை
இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் விசாரணை முடிந்து, நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். இதில் சிறுமியை கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த கணேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணத்தொகையாக ரூ.2 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜராகி வாதாடினார்.