நாகப்பட்டினம்
குரூப்-4 தேர்வை 17 ஆயிரத்து 327 பேர் எழுதினர்
|நாகை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 17 ஆயிரத்து 327 பேர் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 123 பேர் தேர்வு எழுதவரவில்லை
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 17 ஆயிரத்து 327 பேர் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 123 பேர் தேர்வு எழுதவரவில்லை
குரூப்-4 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.அதன்படி நாகை மாவட்டத்தில் 82 மையங்களில் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத நாகை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 450 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் 6 ஆயிரத்து 400 ஆண்களும், 10 ஆயிரத்து 927 பெண்களும் என மொத்தம் 17 ஆயிரத்து 327 பேர் தேர்வு எழுதினர். 1,396 ஆண்களும், 1,727 பெண்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 123 பேர் தேர்வு எழுதவில்லை.
பறக்கும் படை
மாவட்டத்தில் நாகை, கீழ்வேளுர், வேதாரண்யம், திருக்குவளை ஆகிய நான்கு தாலுகாக்களில் தேர்வு நடந்தது. நான்கு தாலுகாவிற்கு ஒரு உதவி கலெக்டர் நிலையில் தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். 82 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 4 பறக்கும்படை அலுவலர்களும், 18 சுற்றுகுழு அலுவலர்களும், 82 ஆய்வு அலுவலர்களும், 86 வீடியோகிராபர்களும் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுதும் வசதியும்,பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்று நபர் வசதியும் செய்யப்பட்டிருந்தது.தேர்வு மையங்களில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
200 வினாக்கள்
இந்த தேர்வு எழுத 10-ம் வகுப்பு தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தாலும் பட்டப்படிப்பு முதல் என்ஜினீயரிங் படிப்பு முடித்தவர்கள் வரை பலர் ஆர்வத்துடன் வந்து தேர்வு எழுதினர். ஹால்டிக்கெட்டுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்றனர். காலை 9 மணி வரை தேர்வு எழுத வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் அதிகாரிகள் அனுமதித்தனர்.
9.30 மணிக்கு தேர்வு தொடங்கி, பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. எழுத்துத்தேர்வில் பிரிவு 1-ல் கட்டாய தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. பி பிரிவில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்களும் என 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஒரு கேள்விக்கு 1½ மதிப்பெண் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர், கடிகாரம் உள்ளிட்டவைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு எழுத வருபவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.