< Back
மாநில செய்திகள்
இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை திரும்பினர் - 4 பேர் கோவைக்கும், 2 பேர் மதுரைக்கும் சென்றடைந்தனர்
சென்னை
மாநில செய்திகள்

இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை திரும்பினர் - 4 பேர் கோவைக்கும், 2 பேர் மதுரைக்கும் சென்றடைந்தனர்

தினத்தந்தி
|
19 Oct 2023 2:38 PM IST

இஸ்ரேலில் இருந்து 5-வது கட்டமாக விமானத்தில் 23 தமிழர்கள் டெல்லி வந்தனர். அதில் 17 தமிழர்கள் சென்னை திரும்பினர். 4 பேர் கோவைக்கும், 2 பேர் மதுரைக்கும் சென்றடைந்தனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடந்த 13 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தின் மூலம் மீட்டு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். இதில் ஏற்கனவே 4 கட்டங்களாக தமிழர்கள் உள்பட இந்தியர்கள் அழைத்து வரப்பட்டநிலையில், 5-வது கட்டமாக விமானத்தில் 23 தமிழர்கள் டெல்லி வந்தனர். இதில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் சென்னைக்கு வந்தனர். 4 பேர் கோவைக்கும். 2 பேர் மதுரைக்கும் சென்றனர். சென்னை வந்த 17 பேரை வடசென்னை தி.மு.க. எம்.பி.யும் தி.மு.க. அயலக அணி செயலாளருமான கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத் துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரமடைந்த நிலையில் மத்திய அரசு 5 நாட்களாக அங்குள்ள இந்தியர்களை அழைத்து வருகிறார்கள். மத்திய வெளியுறவுத்துறை மந்திரியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதன் பேரில், அங்குள்ள 158 தமிழர்களில் 121 பேர் தமிழ்நாடு திரும்பியுள்ளனர். 26 பேர் தாமாக திரும்பியுள்ளனர் என கூறினார்.

மேலும் செய்திகள்