கலவரத்தில் 17 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது - எஸ்.பி தகவல்
|கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற போது 17 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இதில் காவல்துறையினர் மீது கல்வீச்சு காவல்துறையின் வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர்.
மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவி இறப்பு தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறியதால் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார்பாளையம் உள்ள்ளிட்ட தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளாதகவும் அமைதி நடவடிக்கை தொடர்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவரம் நிகழ்ந்த பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, உள்துறை செயலளார் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். சின்னசேலத்தில் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி அதிரடிப்படை கலைத்து வருகிறது.
கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற போது 17 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி கூறியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:- இந்த கலவரத்தில் டிஐஜி, எஸ்பி உள்பட 17 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு துயர சம்பவத்தை கடினமாக கையாளக்கூடாது என்பதால் நாங்கள் மிகவும் மென்மையாகவே கையாண்டோம். அவர்களை கலைக்க மட்டுமே முயன்றோம்.
போராட்டக்காரர்கள் மீது எந்த விதமான ஆயுதங்களையும் உபயோகப்படுத்தவில்லை. பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண முயன்றோம். ஆனால் பொதுமக்கள் கொஞ்சம் அதிகமாக சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் சொன்னாலும் அவர்கள் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்தும் நாங்கள் விசாரணை நடத்துவோம் என்று கூறினார்.
மேலும் அவர், காலையில் சுமார் 450 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலையிலே இந்த பகுதியில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. பின்னர் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. நாங்கள் போக்குவரத்தை திருப்பி விட்டதால் பொதுமக்களுக்கோ அவர்களது வாகனங்களுக்கோ எந்த வித சேதமும் ஏற்படவில்லை.
காலையிலிருந்தே போக்குவரத்தை திருப்பியதால் இந்த பகுதியில் கூட்டம் வரவில்லை. மேலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்திருந்தோம். ஆனால் திடீரென பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்கத்த தொடங்கியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறினார்.