< Back
மாநில செய்திகள்
கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர 16 ஆயிரம் பேர் விண்ணப்பம் - கடந்த ஆண்டை விட குறைவு
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர 16 ஆயிரம் பேர் விண்ணப்பம் - கடந்த ஆண்டை விட குறைவு

தினத்தந்தி
|
5 Oct 2022 8:26 PM IST

விண்ணப்பப்பதிவு முடிந்துள்ள நிலையில், விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு முறைப்படி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.

சென்னை:

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (செப்டம்பர்) 12-ந் தேதி தொடங்கியது.

சென்னை, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் மருத்துவப் படிப்புகளில் 580 இடங்களும், இதுதவிர உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு ஆகியவற்றில் உள்ள 100 இடங்களும் என மொத்தம் 680 இடங்கள் இருக்கின்றன.

இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் போக மீதமுள்ள இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 3-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதில் மருத்துவப் படிப்புகளில் சேர 13 ஆயிரத்து 470 பேரும், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேருவதற்கு 2 ஆயிரத்து 744 பேரும் என மொத்தம் 16 ஆயிரத்து 214 பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரத்து 760 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இது கடந்த ஆண்டை விட விண்ணப்பப்பதிவு குறைந்திருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. விண்ணப்பப்பதிவு முடிந்துள்ள நிலையில், விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, முறைப்படி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.

மேலும் செய்திகள்