செங்கல்பட்டு
மாமல்லபுரம் அருகே வேன் கவிழ்ந்து 16 பெண் தொழிலாளர்கள் காயம்
|மாமல்லபுரம் அருகே வேன் கவிழ்ந்து 16 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
வேன் கவிழ்ந்தது
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் பள்ளி நோட்டு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பெண்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், தினந்தோறும் தொழிற்சாலைக்கு வேனில் சென்று வந்தனர். வழக்கம்போல் இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் வேனில் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
வேன், மாமல்லபுரம் அடுத்த எச்சூர் அய்யப்பன் கோவில் அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையின் நடுவில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காயம்
இந்த விபத்தில் வேனில் இருந்த 16 பெண் தொழிலாளர்கள் மற்றும் டிரைவர் காயம் அடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி வலி தாங்க முடியாமல் பெண்கள் கூச்சலிட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு எச்சூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் சி.கோவிந்தசாமி அந்த பகுதி மக்களை அழைத்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை கிரேன் உதவியுடன் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைக்கப்பட்டது. காயமடைந்த பெண்களை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.