திருச்சி
காரில் இருந்த 16 பவுன் நகைகள் திருட்டு
|காரில் இருந்த 16 பவுன் நகைகள் திருட்டுபோனது.
நகைகள் திருட்டு
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள கூன்ரங்கம்பட்டி அரசி மலையாளி கோவிலில் முப்பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பூஜைக்கு கூன்ரங்கம்பட்டி முத்துசாமி-பரமேஸ்வரியின் வீட்டிற்கு விருந்தினராக சிறுத்தையூர் லால்குடி குடித்தெருவை சேர்ந்த வேலுச்சாமி, தனது மனைவி கவுதமி(வயது 33), 2 குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியாருடன் தனது காரில் வந்தார். அப்போது கவுதமி கைப்பையில் இருந்த தனது நகைகளை காரில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் மர்ம நபர்கள், காரின் கதவை திறந்து கைப்பையில் இருந்த 16 பவுன் நகைகளை திருடிவிட்டு, பையை தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து காருக்கு வந்த கவுதமி, காருக்கு அருகில் தனது கைப்பை கிடைந்ததையும், அதன் அருகே தான் அந்த பையில் வைத்திருந்த கைச்சங்கிலி கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்து அவர் காட்டுப்புத்தூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர் சுர்ஜித் அங்கு வந்து தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் லிலி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.