கடலூர்
முதியவரை வழிமறித்து 16 பவுன் நகை பறிப்பு
|நெய்வேலி அருகே முதியவரை வழிமறித்து 16 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
நெய்வேலி
நகையுடன் சென்ற முதியவர்
நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் எஸ்.பி.டி.எஸ். நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 65). இவர் நேற்று மதியம் என்.எல்.சி. சுரங்கம் 2 அருகே உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்திருந்த 16 பவுன் நகையை மீட்டார். பின்னர் அவர் மீட்ட நகைகளை ஒரு பையில் போட்டு மொபட்டின் முன்பகுதியில் தொங்க விட்டுக் கொண்டு, அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 4 பேர் திடீரென 20, 50 ரூபாய் நோட்டுகளை கீழே வீசியதுடன், குணசேகரனை வழிமறித்து உங்கள் பணம் கீழே கிடக்கிறது என கூறியுள்ளனர். உடனே குணசேகரன் மொபட்டை நிறுத்திவிட்டு கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றார்.
ரூபாய் நோட்டுகளை கீழே வீசி...
அந்த சமயத்தில் மர்மநபர்கள் 4 பேர் திடீரென குணசேகரன் மொபட்டில் இருந்த நகை பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். நகையை பறிகொடுத்த குணசேகரன் இதுபற்றி மந்தாரக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததுடன், வங்கி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர். அப்போது குணசேகரன் வங்கியில் அடகு வைத்த நகையை மீட்டு செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்து சென்று ரூபாய் நோட்டுகளை கீழே வீசி, அவரிடம் உங்கள் பணம் கீழே கிடக்கிறது என கூறி கவனத்தை திசை திருப்பி ரூ.6½ லட்சம் மதிப்புள்ள 16 பவுன் நகைகளை பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 4 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.