< Back
மாநில செய்திகள்
பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்வதாக ரூ.16½ லட்சம் மோசடி - 8 பேருக்கு வலைவீச்சு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்வதாக ரூ.16½ லட்சம் மோசடி - 8 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
19 Aug 2022 2:37 PM IST

பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்வதாக ரூ.16½ லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட ரெயில் நகர், 7-வது தெரு, சாய்ராம் அப்பார்ட்மெண்ட்ஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி சிவசங்கரி (வயது 32), இவர் தாம்பரம் மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கோடிலிங்கத்திடம் புகார் மனு அளித்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிர் வீட்டில் வசித்து வருபவர் காமாட்சி. இவரது கணவர் கார்த்திகேயன், தம்பி பத்திரகாளிமுத்து, மாமனார் ஜெகநாதன், மாமியார் மகேஸ்வரி, இவர்களது குடும்ப நண்பர் விக்னேஸ்வரன். அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் சேர்ந்து பிரபல நிறுவனங்களில் பங்கு சந்தையில் (ஷேர் மார்க்கெட்டில்) முதலீடு செய்து தினமும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லாபம் சம்பாதிக்கிறோம். நீங்களும் பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்று சொல்லி என்னிடமும் என்னுடைய கணவரிடமும் காமாட்சி பணம் கேட்டார்.

ஆரம்பத்தில் நாங்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டோம் தொடர்ந்து காமாட்சி, அவரது கணவர் கார்த்திகேயன், மேற்கண்ட புகாரில் உள்ள நபர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் வீட்டுக்கு அடிக்கடி நேரில் வந்து பேசி, நான் நம்பும் வகையில் அது தொடர்பான விளம்பரங்கள் செய்திகளை எனக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி ஆசையை தூண்டி நம்ப வைத்தனர். முதலீடு செய்யும் பணம் 100 சதவீதம் பாதுகாப்பானது எனவும், மூதலீடு பணம் தேவைப்பட்டால் ஒரு மாதத்திற்கு முன்னர் சொன்னால் திருப்பி கொடுத்து விடுவதாக உறுதி அளித்தனர்.

மேலும் 10 சதவீதம் லாபம் தருவதாகவும் கூறினார்கள். காமாட்சி குடும்பத்தினர் எதிர் வீட்டில் குடியிருப்பவர்கள் என்பதால் காமாட்சி மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதை முழுமையாக நானும் எனது கணவரும் நம்பி அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.16½ லட்சத்தை 3 தவணைகளாக அனுப்பினோம், ஒரு மாதம் மட்டும் பங்கு சந்தையில் கிடைத்த ஊக்கத்தொகை என்று கூறி ரூ.50 ஆயிரம் கொடுத்தார்கள். அதன் பின்னர் பணம் எதுவும் கொடுக்கவில்லை, காரணம் கேட்டால் வருமானவரி பிரச்சினை இருப்பதால் உங்களுக்கு பணத்தை திருப்பி தருவதில் பிரச்சினை உள்ளது என்று கூறினார்கள் இதனால் நாங்கள் முதலீடு செய்த ரூ.16½ லட்சத்தை காமாட்சியிடம் திருப்பி கேட்டேன். பணத்தை திருப்பி தருவதாக கூறி மகாராஜன் என்ற நபர் பெயரில் ஆவணம் மற்றும் காசோலை கொடுத்தனர்.

இதில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் தந்த காசோலையை வங்கி கணக்கில் செலுத்திய போது பணம் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை தொடர்பு கொண்ட போது போன் எடுக்கவில்லை, மேலும் அவர்களது வீடும் நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளது. காமாட்சி வீட்டுக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அப்படி வருபவர்களிடம் விசாரித்தால் எங்களை போலவே பலரிடம் பணத்தை வாங்கி் கொண்டு காமாட்சி மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்வது தெரிய வந்தது.

இ்வ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி மறைமலைநகர் போலீசார் சிவசங்கரி அளித்த புகாரின் பேரில் அவரது எதிர் வீட்டில் வசித்து வந்த காமாட்சி, அவரது கணவர் கார்த்திகேயன், மற்றும் பத்திரகாளிமுத்து, ஜெகநாதன், மகேஸ்வரி, விக்னேஸ்வரன், புவனேஸ்வரி, மகாராஜன் ஆகியோரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்