< Back
மாநில செய்திகள்
காளை விடும் விழாவில் மாடு முட்டி 16 பேர் காயம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

காளை விடும் விழாவில் மாடு முட்டி 16 பேர் காயம்

தினத்தந்தி
|
20 May 2022 7:54 PM IST

திருப்பத்தூர் அருகே காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 16 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 16 பேர் காயமடைந்தனர்.

காளைவிடும் விழா

திருப்பத்தூர் அருகே உள்ள வக்கீல் ஐயர்தோப்பு பகுதியில் காளை விடும் விழா நடைபெற்றது. திருவிழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 காளைகள் பங்கேற்றன. காளைகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது. கால்நடைகளை, கால்நடை உதவி இயக்குனர் நாசர் பரிசோதனை செய்தார். இதில் 2 காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

ஊர் கவுண்டர்கள் கே.சி.கோவிந்தராஜ், பி.ரத்தினவேல், தர்மகர்த்தா வி.கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.சரவணன், கே. ஜெய்சங்கரர் ஆகியோர் முன்னிலைவகித்தனர், திருப்பதி வரவேற்றார்.

16 பேர் காயம்

காளைவிடும் விழாவை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். வருவாய்த் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. அப்போது இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்த காளைகள் மீது கைகளை வைத்து தட்டினார்கள். அப்போது காளைகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர்.

குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.55 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.45 ஆயிரம் என 41 ரொக்கப் பரிசுகள், சில்வர் குடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள். இளைஞரணியினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்