செங்கல்பட்டு
முறைகேடான 16 ஆழ்துளை கிணறுகள், 34 மின் இணைப்புகள் துண்டிப்பு; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அதிரடி
|முறையற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின் இணைப்புகளை துண்டிக்குமாறும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
பள்ளி மாணவி லியோரா ஸ்ரீ பலியானதை தொடர்ந்து விபத்து நடந்த இடம் மற்றும் கீழ்க்கட்டளை ஏரியையொட்டி தண்ணீர் எடுத்து செல்லும் லாரிகள் நிற்கும் இடத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ள மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கலெக்டர், மாணவியின் தாயார், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேடவாக்கம் சாலையில் மெட்ரோ ெரயில் பணிகள் நடைபெற்று வருவதால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. எனவே பணிகள் முடிவடைந்துள்ள இடங்களின் நடுவில் தடுப்புகள் அமைத்து இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்திடுமாறு போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் கீழ்க்கட்டளை ஏரியையொட்டி நன்மங்கலம் ஏரி, கிணறுகளில் முறைகேடாக தண்ணீர் எடுக்கப்பட்டு சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதை தடுக்க முறையற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின் இணைப்புகளை துண்டிக்குமாறும் கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி அப்பகுதியில் உள்ள முறையற்ற 16 ஆழ்துளை கிணறுகள் மற்றும் 34 மின் இணைப்புகளை தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா மேற்பார்வையில் துண்டிக்கப்பட்டது. அத்துடன் தண்ணீர் லாரி மற்றும் இதர லாரிகள் செல்வதற்கான நேரம் முறைப்படுத்தப்படும் எனவும் கலெக்டர் தெரிவித்தார்.