< Back
மாநில செய்திகள்
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 16 அடி உயர கருணாநிதி சிலை
மாநில செய்திகள்

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 16 அடி உயர கருணாநிதி சிலை

தினத்தந்தி
|
29 May 2022 5:14 AM IST

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று நடந்த கோலாகல விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்து புகழாரம் சூட்டினார்.

சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வெங்கையா நாயுடு திறந்துவைத்தார்

தற்போது தமிழக அரசு சார்பில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதிக்கு ரூ.1.70 கோடி செலவில் 16 அடி உயர முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.

விழாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிலையை திறந்துவைத்தார். அருகில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதன் பின்னர் அருகில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவின் தொடர் நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளரும்,நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்வரவேற்று பேசினார்.

சிறப்பு காணொலி தொகுப்பு

அதன் பின்னர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் மார்பளவு சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார். அதற்கு அடுத்து, கருணாநிதி பற்றிய 12 நிமிடங்கள் ஓடும் சிறப்பு காணொலி தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து விழாவுக்கு தலைமை தாங்கிய தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதையடுத்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

மகிழ்ச்சி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலையை திறந்து வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையிலேயே அவர் இந்தியாவின் மிகுந்த சக்தி வாய்ந்த முதல்-அமைச்சர்களுள் ஒருவராக இருந்தார். இந்தியாவிலேயே மிகச்சிறந்த தலைமகனின் சிலையை திறந்து வைத்திருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பதற்கு முதல்-அமைச்சர் என்னை அழைத்தபோது எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனடியாக ஒப்புக்கொண்டேன். நிலையான அரசாட்சி வழங்கிய ஒரு சிறந்த நிர்வாகி அவர்.

சிறந்த பேச்சாளர்

எனது மாணவப்பருவத்தில் இருந்தே ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். உள்பட முக்கிய தலைவர்களின் பேச்சுகளை உன்னிப்பாக கவனித்திருக்கிறேன். நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் கருணாநிதியும் ஒருவர்.

கொள்கைகளையும், யோசனைகளையும் அவர் சொன்ன விதம், அந்த இளம் வயதில் என்னை ஈர்த்தது. எனக்கென்று ஒரு அரசியல் கொள்கையும், அவரது கொள்கையில் இருந்து மாறுபாட்டை நான் கொண்டிருந்தாலும், அவரது கருத்துகளை மக்கள் மத்தியில் அவர் சேர்த்த விதம் என்னை கவர்ந்தது.

தமிழக அரசுக்கு நன்றி

அவருடன் அரசியலில் இருந்தபோது நான் பேசியிருக்கிறேன். மக்களுக்காக அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, அதற்கான பணியில் இருந்த ஒழுக்கம் ஆகியவற்றை அறிந்திருக்கிறேன். இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த தமிழக அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை எப்போதுமே எனக்கு அருமையான நகரமாகவும், எனது வாழ்க்கையில் ஒரு சிறப்பு நகரமாகவும் உள்ளது.

எனது நீண்ட பொது வாழ்க்கையில் பல தசாப்தங்களாக கருணாநிதியுடன் நெருங்கி கலந்துரையாடிய நல்ல அதிஷ்டத்தை பெற்றிருப்பவன் நான். அவர், பல திறமைகள் ஒருங்கே அமைந்தவராக திகழ்ந்தார். கூர்மதியுள்ள அரசியல்வாதியாக இருந்து, போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றார். அதுமட்டுமல்லாமல் அவரது கட்சியின் தலைமை பதவியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தார்.

பன்முக ஆளுமை

தமிழகத்தின் வளர்ச்சி பாதையில் என்றும் அழியாத தடத்தை விட்டு சென்றுள்ள உண்மையான பன்முக ஆளுமை கொண்டவர் கருணாநிதி. வளர்ச்சி மற்றும் சமூக நலனின் மரபை நிலை நிறுத்திய முதல்-அமைச்சராக அவர் திகழ்ந்தார்.

புத்திசாலித்தனம், இலக்கிய சுவை மற்றும் கற்றறிந்த வெளிப்பாடுகளோடு பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் தலைசிறந்த சொற்பொழிவாளராக கருணாநிதி இருந்தார். ஆக்கப்பூர்வமான அரசியல் விவாத கலையில் சிறந்து விளங்கிய ஒப்பற்ற சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

கவுரவ பட்டம்

கலை, கலாசாரம் மற்றும் இதழியலின் மீது கருணாநிதி கொண்டிருந்த ஈடுபாட்டினாலும், 1948-ம் ஆண்டில் தூக்குமேடை என்ற அவரது சினிமா மிக பிரமாண்ட வெற்றியை பெற்றதினாலும் அவருக்கு கலைஞர் என்ற கவுரவ பட்டம் வழங்கப்பட்டது.

தனது எழுத்து மற்றும் வசனங்களின் மூலமாக தமிழ் திரைப்படத்துறையில் புதிய பாதையை கருணாநிதி வகுத்தார். தி.மு.க.வின் வெளியீடான அவர் நிறுவிய முரசொலி பத்திரிகையில் எழுதிய விசாலமான கருத்துகளின் மூலம் சக்திவாய்ந்த எழுத்தாளராகவும் கருணாநிதி விளங்கினார்.

அரசியல் சீர்திருத்தவாதி

சிறந்த நிர்வாகி, சமூக ஆர்வலர், அரசியல் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், கவிஞர், திரைப்பட எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர் என்ற நிலைகளில் இருந்த கருணாநிதியின் பணிகளில் பொதுவான கருத்து இருந்தால், அது சமூக சமத்துவமும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை கொண்டதாகத்தான் இருக்கும்.

1947-ம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பிறகு, நமது நாட்டின் வளர்ச்சிப்பாதையை வடிவமைத்த மேன்மைவாய்ந்த பிரதமர்களையும், முதல்-அமைச்சர்களையும் நாம் பெற்றிருந்தோம். மத்திய மற்றும் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதிலும், அரசியல் வடிவமைப்புகளை மேற்கொள்வதிலும், திட்டங்களை வகுப்பதிலும், நிறுவனங்களை கட்டி எழுப்புவதிலும் மிகுந்த முயற்சிகளை அவர்கள் எடுத்துள்ளனர். இந்த நிலையான முயற்சிகள்தான் நம் நாட்டை முன்னிலைப்பாதையில் கொண்டு செல்கிறது.

கூட்டாட்சி தன்மைக்கு வலிமை

அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்து தந்த பாதையால் வழிநடத்தப்பட்டு, இதுபோன்ற தலைவர்கள் நமது அரசியலமைப்பில் உள்ள வார்த்தைகளுக்கு அர்த்தத்தை கொண்டுவர பல்வேறு நிலைகளில் முயன்றுள்ளனர்

நாட்டின் கூட்டாட்சி தன்மைக்கு வலிமை சேர்த்த தலைவர்களுள் கருணாநிதியும் ஒருவர். இதுபோன்ற தலைவர்களுக்கு நன்றி. இந்த நடைமுறையால் வலுவான இந்தியாவை 'டீம் இந்தியா' என்று அழைக்கிறோம்.

தனித்துவம் வாய்ந்த திறன்

மொழிவளம், இலக்கிய மற்றும் கலாசார பொக்கிஷங்கள், தலைசிறந்த கட்டிடவியல், அபாரமான கைவினைத்திறன், அறிவியல், தொழில் மற்றும் வேளாண்மை சாதனைகள் போன்ற வளங்களால் துடிப்பான மற்றும் தனித்துவம் வாய்ந்த திறனை ஒவ்வொரு மாநிலமும் பெற்றுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளார்ந்த வலிமையைப் பயன்படுத்தி, இத்தகைய வியப்பூட்டும் பன்முகத்தன்மையைக் கொண்டாடி, ஒரு நாடாக நாம் வளர்ந்திருப்பதோடு, விவேகமான முன்னேற்றத்தையும் அடைந்துள்ளோம்.

தொலைநோக்கு பார்வை

ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் ஒளிந்திருக்கும் அபரிமிதமான சக்தியை தட்டி எழுப்புவதன் மூலம் அரிதான ஒருங்கிணைப்பை நம்மால் ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்துள்ளோம். கருணாநிதி போன்ற தலைசிறந்த தலைவர்கள் இதைத்தான் செய்ய முயன்றார்கள்.

ஒடுக்கப்பட்ட மற்றும் வளர்ச்சி வட்டத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை கருணாநிதி தொலைநோக்கு பார்வையாக கொண்டிருந்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த்

முடிவில் தலைமைச்செயலாளர் இறையன்பு நன்றி கூறினார். அதன் பின்னர் சென்னை போலீசாரின் பேண்டு வாத்திய குழு தேசிய கீதம் இசைக்க விழா நிறைவடைந்தது.

விழாவில் சபாநாயகர் அப்பாவு, சென்னை மேயர் பிரியா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், நாசர், கவிஞர் வைரமுத்து, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், மகன் மு.க.தமிழரசு, மருமகன் முரசொலி செல்வம், மகள்கள் செல்வி, கவிஞர் கனிமொழி எம்.பி., பேரன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன் உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்